சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ரிஷப் பந்த்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்
ஆஸ்திரேலியாவில் எட்டாவது சீசன் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளன. அதன்படி சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்திய அணியானது 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த போட்டியை வெற்றியுடன் துவங்க ஏற்கனவே இந்திய அணியின் பிளேயிங் லெவன் தயார் என ரோஹித் சர்மா அறிவித்துள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
Trending
இது குறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணிக்கு எதிராக எப்போது விளையாடினாலும் அது ஒரு ஸ்பெஷலான ஆட்டமாகவே இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இந்த போட்டி ஒரு வித்தியாசமான உணர்வை தரும். மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாம் விளையாடும் போது திருவிழா போன்று இருக்கும். கடந்த முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் தோல்வியை தழுவினோம்.
அந்த போட்டியில் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகள் இழந்து ரன் ரேட் தொய்வடைய நேர்ந்ததால் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நான் எனது விக்கெட்டை இழந்து விட்டேன். ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகள் தான் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தரும். அதிலும் குறிப்பாக விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் களத்தில் இருக்கும்போது நமக்கு நிறைய விசயங்களை கற்றுத் தருவார். இம்முறை நிச்சயம் இந்த சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு ரன்களை குவிக்க காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியா வாய்ப்புள்ளதால் அணியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் களம் இறக்க ரோஹித் சர்மா திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now