INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. அதன்படி வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஃபோப் லிட்ச்ஃபீல்ட் - கேப்டன் அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
Trending
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்தனர். பின் இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிசா ஹீலி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்களைச் சேத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 16 ரன்களிலும், பெத் மூனி 3 ரன்களிலும், தஹிலா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்ச்ஃபீல்ட் சதமடித்து அசத்தினார். பின் 16 பவுண்டரி, ஒரு சிக்சர் என 119 ரன்களை எடுத்திருந்த லிட்ச்ஃபீல்ட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஆஷ்லே கார்ட்னர் 30 ரன்களையும், அனபெல் சதர்லேண்ட் 23 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலானா கிங் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 26 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now