
ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆசிய கோப்பையில் 3 முறையாவது இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.
பாகிஸ்தான் அணி பொதுவாக இந்தியாவிற்கெதிரான போட்டி என்றாலே, அழுத்தம் அதிகமாகி, அதனாலேயே நிறைய தவறுகளை செய்து தோல்வியை தழுவிவிடும். ஆனால் இதை மாற்றியமைத்துள்ளது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதேபோல் தங்கள் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருக்கிறார்.