
பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைதார். அதன்படி கனடா அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சனைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் ஜான்சன் அரைசதம் கடந்ததுடன், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சைம் அயூப் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ரிஸ்வானுடன் இணைந்த பாபர் ஆசாமும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.