
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா 44 ரன்களையும், அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் நமந்தீர் 36 ரன்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஏபிடி வில்லியர்ஸின் 9ஆண்டுகால சாதனை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்ததன் மூலம் , ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.