
கிரிக்கெட்டில் தற்பொழுது மிகப்பெரிய நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 3 நாடுகளும் இருந்து வருகின்றன. திறமையின் அடிப்படையில் மட்டுமில்லாமல் வணிகத்தின் அடிப்படையிலும் இவர்கள் மூவரும் பெரியவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் திறமை என்ற அளவில் இவர்களுக்கு மோசமான இடத்தில் கிடையாது. ஆனால் இவர்களுக்கு போட்டியை ஒதுக்குவதில் பாரபட்சம் இருந்து வருகிறது.
குறிப்பாக தற்பொழுது இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. அதே சமயத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடி நாடு திரும்புகிறது.
ஐசிசியை பொறுத்த வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளுக்கு இடையே மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களை நடத்துகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் மட்டுமே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தங்களுக்குள் விளையாடுகின்றன. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கூட இல்லாதது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.