சர்ஃப்ராஸ் கானுக்கு நிச்சயம் அணியில் இடம் கொடுக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளார்.
Trending
இதன் காரணமாக நீண்ட காலமாக வாய்ப்புக்காக காத்திருந்த சர்ஃப்ராஸ் கான் முதன் முதலாக இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் ‘டான் பிராட்மேன்’ என்றழைக்கப்பட்டு வந்த சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள செய்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றதுடன், அவருக்கான வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இதனால், இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃப்ராஸ் கானுக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இது எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் சர்ஃப்ராஸ் கானின் சாதனை மிகவும் சிறப்பாக உள்ளது. இப்போட்டியில் விளையாட யாருக்காவது தகுதி இருந்தால் அது சர்ஃப்ராஸ்தான். அவர் உள்ளூர் போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் விளையாடி 3912 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 69.85. அதில் 14 சதங்களும், 11 அரைசதங்களையும் அடித்துள்ளார். இது சாதாரணமானது அல்ல. மேலும் சர்பராஸுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அதேபோல் ராஜத் பட்டிதாரும் சிறப்பாக விளையாடி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now