
ஆசிய அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 30 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. இந்ததொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை எதிர்த்து விளையாட உள்ளது . பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த இந்த ஆசிய கோப்பை போட்டிகள் நீண்ட காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நிலவி வரும் அரசியல் காரணங்களால் முதல்முறையாக ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது .
இறுதிப் போட்டி உட்பட 13 போட்டிகளைக் கொண்ட ஆசிய கோப்பையில் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் வைத்து நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக காயம் காரணமாக வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐபிஎல் தொடரில் காயம் அடைந்த கேஎல் ராகுல் ஆகியோரின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு சிறிது தாமதமாக அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த 17 பேர் கொண்ட இந்த பட்டியலில் இளம் வீரரான திலக் வர்மாவும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஆசியக் கோப்பை காண ஒருநாள் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அணியில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான யுசேந்திர சஹால் நீக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.