
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் தேதி காலேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் அடித்தது. இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. ஓபனிங்கில் ஒஷாடா ஃபெர்னாண்டோ (35) மற்றும் பின்வரிசையில் மஹீஷ் தீக்ஷனா (38) ஆகிய இருவரும் சிறிய பங்களிப்பு செய்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தனி நபராக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாபர் அசம் 119 ரன்களை குவித்தார். பாபரின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 218 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அடித்த 218 ரன்களில் 119 ரன்கள் பாபர் அசாம் அடித்தது. எஞ்சிய 99 ரன்கள் தான் மற்ற வீரர்கள் அனைவரும் இணைந்து அடித்தது.
4 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாதா ஃபெர்னாண்டோ சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஃபெர்னாண்டோ 64 ரன்கள் அடித்தார். திமுத் கருணரத்னே (16) மற்றும் ரஜிதா (7) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். சீனியர் வீரர் ஆஞ்சலோ மேத்யூஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் குசால் மெண்டிஸ் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். குசால் மெண்டிஸ் 76 ரன்கள் அடித்தார்.