
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், ஆந்திர கிரிக்கெட் சங்கம் மற்றும் ஹனுமா விஹாரியின் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி திடீரென அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின் அந்த அணி மத்திய பிரதேச அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பின், அந்த அணியின் ஹனுமா விஹாரி தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும், இதனால் இனி ஆந்திரா அணிக்காக விளையடப்போவதில்லை என்றும் அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மகனுக்காக தன்னுடைய கேப்டன்சி பறிக்கப்பட்டதாகவும் குண்டைத் தூக்கிப்போட்டார்.
அதன்பின் சம்மந்தப்பட்ட அரசியல்வாதியின் மகன் பிரித்வி ராஜ், “நீங்கள் தேடும் வீரர் நான் தான். ஹனுமா விஹாரி கூறிய குற்றச்சாட்டுகள் பொய். இதுபோன்ற அனுதாப விளையாட்டுக்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விளையாடுங்கள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். இந்நிலையில்தான் தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என சக வீரர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஹனுமா விஹாரி வெளியிட்டார்.