
நடப்பு 2023 உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி கலக்கி வருகிறார். அவர் இந்த உலகக்கோப்பையில் தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே 14 விக்கெட்களை அள்ளினார். தற்போது நான்கு போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக பல ஆண்டுகளாக இருக்கிறார் முகமது ஷமி.
முகமது ஷமி, ஹாசின் ஜஹான் என்பவரை 2014இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2015இல் மகள் பிறந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. ஹாசின் ஜஹான், ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்களை கூறினார். ஷமி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூட அவர் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷமியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார். அவர் பிரபல அரசியல்வாதியான ராம்தாஸ் அதவாலேவின் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியில் மகளிரணி துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரும், ஷமியை போன்றே மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தான்.