
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற முக்கியமான 4ஆவது போட்டியில் மீண்டும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் அதிரடியாக 46, ஜித்தேஷ் சர்மா 35, ஜெயஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 175 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 154/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ வேட் 36 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 3, தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை சாய்ந்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.