
இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரு மைதானத்தில் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டு அணியுமே வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் நீடிக்க முடியும் என்கின்ற நிலைமை இருந்தது. இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் 3 போட்டிகளை தோற்று, ஒரு போட்டியை வென்று, இரண்டு புள்ளிகள் எடுத்து, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ரன் ரேட்டை சிறிய பெங்களூரு மைதானத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் மாறி மாறி தவறான முடிவுகளை மட்டுமே எடுப்பதற்கான தண்டனையை இன்றும் இங்கிலாந்து அணி அனுபவித்தது. வெயில் அதிகமான மும்பை மைதானத்தில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தவறு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெறும் 156 ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகி, மீண்டும் அவர்களது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இது போதாது என்று அந்த அணியின் ஆதில் ரஷீத் பேட்டிங் செய்ய வந்த பொழுது, மிகவும் மந்தமான அலட்சியமான ஒரு செயல்பாட்டை காட்டி ரன் அவுட் ஆகியது இன்னும் இங்கிலாந்து ரசிகர்களை வெறுப்பேற்றியிருக்கிறது.