கிரேம் ஸ்வானின் சாதனையை முறியடித்த ஆதில் ரஷித்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆதில் ரஷித் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சதமடித்து அசத்தியதுடன் 103 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 78 ரன்களையும், பிராண்டன் கிங் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 166 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், குடகேஷ் மோட்டி மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேக் ஸ்வான் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 178 போட்டிகளில் 223 இன்னிங்ஸ்களில் விளையாடி 410 விக்கெட்டுகளை குவித்திருந்ததே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது ஆதில் ரஷித் இப்போது மூன்று வடிவங்களிலும் 294 போட்டிகளில் 298 இன்னிங்ஸ்களில் விளையாடி 412 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திவுள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியதில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now