
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளில் முதல் போட்டியில் அயர்லாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், செதிகுல்லா அடல் 19 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து எமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்களுக்கும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது இஷாக் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனுபவ வீரர் முகமது நபி வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.