
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான், முகமது இஷாக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஃப்கான் அணி 14 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த செதிகுல்லா அடல் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செதிகுல்லா அடல் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அனுபவ வீரர் முகமது நபி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.