
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களுக்கும், ரீஸா ஹென்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 2 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் 10 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த வியான் முல்டர் - ஃபோர்டுன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடிய வியான் முல்டர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் வியான் முல்டர் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஃபோர்டுன் 16 ரன்களுக்கும், நந்த்ரே பர்கர் ஒரு ரன்னிலும், இறுதியில் லுங்கி இங்கிடி ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 106 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.