
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22ஆவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி வரலாறு வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது, பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது 49 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஃஃப்கானிஸ்தான் அணி சார்பாக தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் 65 ரன்களையும், இப்ராஹீம் ஸத்ரான் 87 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேபோன்று மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விளையாடிய ரஹமத் ஷா 77 மற்றும் கேப்டன் ஷாஹிதி 48 ரன்கள் என அடித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு அழைத்து சென்றனர்.