
ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வ்ங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர்.
பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 13 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 145 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரருமான இப்ராஹிம் ஸத்ரான் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.