
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்ஃப்கானிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ரஷீத் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாட இருந்த நிலையில் அப்போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் அவர் தற்போது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப உள்ளார். ரஷித் கடைசியாக மார்ச் 2021 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது.