
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் அனலாக பந்துவீசி 110 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கடந்த போட்டியை போல் மளமளவென விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும் இம்முறையும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு அவுட்டானது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 23 (33), ஜானி பேர்ஸ்டோ 38 (38) பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ஜோ ரூட் 11 (21) கேப்டன் ஜோஸ் பட்லர் 4 (5) பென் ஸ்டோக்ஸ் 21 (23) லியாம் லிவிங்ஸ்டன் 33 (33) என முக்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் 200 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட தங்களது அணியை 7-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் ஜோடி சேர்ந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மொயின் அலி 47 (64) ரன்களும் டேவிட் வில்லி 41 (49) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள். அற்புதமாக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 247 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியா அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்துக்கு பதில் சொல்ல முடியாமல் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு சுருண்டது.