ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.
இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அதில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஃப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
முதல் சூப்பர் ஓவரில் முதலாவதாக பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி கடைசி பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுத்தார். அப்போது ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி எரிந்தார். ஆனால் அந்த பந்து தன் மீது பட்டு வேறு பக்கம் சென்றதை பயன்படுத்திய முகமது நபி எக்ஸ்ட்ராவாக 2 ரன்கள் எடுத்தார். இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, எப்படி நீங்கள் ரன்கள் எடுக்கலாம்? என்று முகமது நபியிடம் வாதிட்டார்.