
கடந்த 2000ஆம் ஆண்டில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே இந்தியாவை வெற்றி நடைபோடும் அணியாக மாற்றினார். அவருக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து 2007, 2011 ஆகிய வருடங்களில் உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.
அத்துடன் தாம் உருவாக்கிய ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், தவான் உள்ளிட்ட வீரர்களை வைத்து 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் இப்போதைய இந்திய அணியில் விளையாடும் 70 சதவித வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பளித்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்தார்.
அதன்பின் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாவதற்கான வாய்ப்புகளையும் ஆதரவையும் கொடுத்து விடைபெற்றார். ஆனால் அவருக்கு பின் தற்போது முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையில் நிறைய குளறுபடிகள் நடைபெறுவதாக அனைவரும் கருதுகின்றனர். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் இதுவரை 50% க்கும் மேற்பட்ட தொடர்களில் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுப்பதிலேயே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.