
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இத்தோல்வியின் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை எதிரொலித்து உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தோனியை போல் அவர் அமைதியாக இருந்தாலும் தலைமைத்துவப் பண்பு அவரிடம் இல்லை என விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அஜய் ஜடேஜா,"ராகுல் எப்போதும் அட்ஜஸ்ட் செய்கிறார், மென்மையாகப் பேசுகிறார் இது கேப்டனாக இருக்கச் சரிப்பட்டு வராது. ராகுலிடம் தலைமைத்துவ பண்பு இல்லை. அவர் மென்மையான குணம் படைத்தவர், இதனால் நீண்ட காலம் அவர் கேப்டனாக இருக்க முடியும். ஆனால் அது கேப்டன்சிக்குப் போதாது.