
இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆன இஷான் கிஷன் 2022இல் மாற்று துவக்க வீரராக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை அணிக்குள் வருவதும், போவதுமாகவே இருக்கிறார் இஷான் கிஷன். இத்தனைக்கும் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தன்னை நிரூபித்து வருகிறார். ஆனாலும், அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
2023 ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளில் ரன் குவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி இரண்டு அரைசதம் அடித்தார். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளின் போது ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வேண்டி இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறியது அணி நிர்வாகம்.