
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவட்கு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உடல்நிலை பிரச்சனை காரணமாக மொயின் அலி விலகினார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வீரர் ரஹானே களமிறங்கினார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஆனால் சேஸிங்கின் போது சென்னை அணி ரன் ஏதும் எடுக்காமல் கான்வே விக்கெட்டை இழந்து சிக்கலில் சிக்கிய போது ரஹானே களமிறங்கினார். அப்போது தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரஹானே 19 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, சென்னை அணியை டிரைவர் சீட்டில் அமர வைத்தார். இறுதியாக 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது சென்னை அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களுக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
இதனால் ரஹானேவை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு பின் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியில் ரஹானே சேர்க்க வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அதேபோல் பும்ராவும் பங்கேற்பது சந்தேகம் தான்.