
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த அஜிங்கியா ரஹானே தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ரஹானே தனது ஃபார்மை நிரூபித்து மீண்டும் தனக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறார்.
ஏனெனில் அவர் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாடினார். ஆனால் அதில் அவரால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு, அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், ராஜத் பட்டிதார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வர்கிறது.
அதன்பின்னர் ரஹானே உள்ளூர் கிரிக்கெட்ல் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடி வருவதுடன் தனது ஃபார்மையும் மீட்டு வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அஜிங்கியா ரஹானே, 12 இன்னிங்ஸ்களில் 437 ரன்கள் எடுத்துள்ளார், இதில் ஹரியானாவுக்கு எதிரான காலிறுதியில் அவர் சதமடித்தும் அசத்தினார். இதுதவிர்த்து சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவர் 58.62 என்ற சராசரியில் 469 ரன்களைச் சேர்த்தார்.