ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் குழுவில் அஜித் அகர்கர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர். தற்போது 44 வயது அகர்கர், இந்திய அணிக்காக 1998 முதல் 2007 வரை 26 டெஸ்டுகள், 191 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 58 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 288 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகத் தற்போது பணியாற்றி வரும் அஜித் அகர்கர், ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
Trending
கடந்த வருடம் டெல்லி அணியில் பணியாற்றிய முகமது கைஃப், அஜய் ராத்ரா ஆகியோரின் ஒப்பந்தங்கள் இம்முறை புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அஜித் அகர்கர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார்.
இலங்கை அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தில் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் பணியாற்றவுள்ள அஜித் அகர்கர், மார்ச் 16-க்குப் பிறகு டெல்லி அணியின் வலைப்பயிற்சி முகாமில் இணைந்துகொள்வார். 2013இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அகர்கர், முதல்முறையாகப் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now