
ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ரன் அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியது. விதிகளுக்கு உட்பட்டே ரன் அவுட் செய்யப்பட்டதால் மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி விளையாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில் இங்கிலாந்து வீரரை ரன் அவுட் செய்தாக பலரும் விமர்சித்தனர்.
இங்கிலாந்து ரசிகர்களும் ஆஸ்திரேலிய அணி ஏமாற்றுவதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது. இந்த நிலையில், வாய்ப்பு கிடைத்தால் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்தது போல் மீண்டுமொரு ரன் அவுட் செய்வேன் என இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி எச்சரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய அவர், “இது போன்ற விஷயங்கள் முன்பும் நடந்திருக்கிறது. எனக்கு ஆதரவு கிடைத்ததாகவே உணர்கிறேன். எங்களது அணி வீரர்களும் எனக்கு ஆதரவளித்தனர். எங்களுக்கு எது முக்கியம் என்பது தெரிந்திருந்தது. மீண்டும் அதே போன்று ரன் அவுட் செய்யும் வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் ரன் அவுட் செய்வேன். பேர்ஸ்டோ தனது இடத்திலிருந்து நகர்ந்ததை உணர்ந்தே ரன் அவுட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.