
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான அரைசதத்தின் 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களை விளாசினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 97 பந்துகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மேத்யூ கிரிட்லே 37 ரன்களை எடுத்தார். டிரெண்ட் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் டிரெண்ட் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிர ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைப் பின்னுக்கு தள்ளி அலெக்ஸ் ஹேல்ஸ் நான்காம் இடத்திற்கு முன்னெறியுள்ளார்.