
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், 32 பந்துகளில் 209.38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
இந்த அரை சதத்தின் மூலம் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் மற்றும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கை ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் கீரன் பொல்லார்ட் 617 இன்னிங்ஸில் 13537 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் சோயப் மாலிக் 510 இன்னிங்ஸில் 13492 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.