
இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். கடந்த 2011ஆம் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அதிரடியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக தன்னை அறிமுகப்படுத்தி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார். குறிப்பாக 2014இல் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 2015 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் முதன்மை வீரராக விளையாடினார்.
அதை தொடர்ந்து 2016 டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 116 ரன்கள் அடித்த அவர் டி20 கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற இரட்டை சாதனைகளை படைத்து 2019 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தார். இருப்பினும் 2017இல் ஒரு விடுதியில் இரவு நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டதால் அந்த இருவருக்குமே இங்கிலாந்து வாரியம் அதிரடியாக தடை விதித்தது. அதில் பென் ஸ்டோக்ஸ் குறைந்த ரகளை மட்டுமே செய்தது நிரூபிக்கப்பட்டதால் அபராதத்துடன் தப்பிய நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ் அபராதம் மட்டுமல்லாமல் 12 மாதங்கள் அதிரடியான தடையும் பெற்றார்.
அதை விட 2019 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு சில மாதங்கள் முன்பாக ஊக்க மருந்து சோதனையில் தோல்வியை சந்தித்த அவர் 21 நாட்கள் தடையும் பெற்றார். அப்படி குறுகிய காலத்திற்குள் 2 முறை தடை பெற்றதால் 2019 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்த அவருடைய கேரியரும் மங்கத் தொடங்கியது. ஆனாலும் மனம் தளராமல் தடைக்கு பின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய காரணத்தால் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் தேர்வான அவர், அரையிறுதியில் இந்தியாவை அடித்து நொறுக்கி 86 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.