
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கில் 38 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்து அசத்தினார். அதோடு மட்டுமின்றி பந்து வீச்சிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பாண்டியா 6 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான பின் ஆலனை போட்டியின் இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாக்கி வெளியேற்றி இருந்தார். இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய பாண்டியா வெற்றிக்கு பின்னர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.