
ஆஃப்கானிஸ்தான்- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடியேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதன்பாடி ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது முகமது நபி மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி ஆகியோரது அரைசதங்களின் மூலம் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்களையும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 52 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் தஸ்கின் அஹ்மத் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் குறிப்பாக அந்த அணி 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில், அடுத்த 23 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து இப்போட்டியில் படுதோல்வியைத் தழுவியது.