
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் என்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க தவறிவருகின்றனர். அந்தவகையில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே உள்ளிட்ட வீரர்கள் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது அணிக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம் கண்கூடாகவே தெரிந்தது.