
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை.
அதிலும் ஷிவம் தூபே போன்ற வீரர்கள் தொடர்ந்து சோபிக்க தவறிய பட்சத்திலும் அவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டி வந்தன. இதனால் இத்தொடரின் போது தூபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. ஆனாலும் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அதிலும் கடைசி டி20 போட்டியில் அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்து வரவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.