
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே ஆகியோரது அதிரடியின் காரணமாக 15 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன, அணியை வெற்றிபெற வைத்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
மேலும் நடப்பாண்டு ஜூன் மாதம் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் முயற்சியில் தான் ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.