
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அசத்தலாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோற்றதை தவிர்த்து பெரும்பாலும் வென்று வெற்றி நடை போட்ட அந்த அணி அழுத்தமான நாக் அவுட் போட்டியில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டில், 1992 உலககோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானை தெறிக்க விட்டு கோப்பையை வென்றது.
முன்னதாக 2019இல் 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற அந்த அணி தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையையும் ஒரே நேரத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்சமயத்தில் இங்கிலாந்துக்கு நிகரான அணி இல்லை என்றே கூறலாம். இதற்கு காரணம் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிரடி எனும் ஒரே அணுகுமுறையை பின்பற்றும் இங்கிலாந்து அதற்காக வீரர்களை தனித்தனியே தேர்வு செய்கிறது.
குறிப்பாக சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய இங்கிலாந்து இப்போது பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது அதிரடியால் மிரட்டும் அணியாக மாறியுள்ளது. மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஏற்கனவே இங்கிலாந்து மிரட்டும் நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நிர்வகிக்கும் இந்தியா மட்டும் இன்னும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் ஒரே மாதிரியான வீரர்கள் என்ற பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறது.