
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தேச்சி நெரி 42 ரன்களையும், ஹர்திக் வர்மா 38 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்வினி குமார், மயங்க் மார்கண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியானது அன்மோல்ப்ரீத் சிங்கின் அதிரடியான சதத்தின் மூலம் 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்தியாவுக்காக முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார். முன்னதாக இந்த பட்டியலில் முன்னாள் ஆல்ரவுண்டர் யூசுப் பதான் 2009-10 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்ததேச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.