
ரஞ்சிக் கோப்பை தொடர் நேற்று முதல், தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டியில் ராஜஸ்தான், கோவா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய கோவா அணியின் தொடக்க வீரர்கள் அமோன்கர் 9, தேசாய் 27 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பிரபுதேசாய், ஸ்னேகல் கௌதன்கர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தனர். இதில் கௌதன்கர் 59 ரன்களில் ஆட்டமிழந்து, நடையைக் கட்டினார்.
அடுத்து களமிறங்கிய லாட் 17 ரன்களிலும், ஏக்நாத் கெர்கார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தப் பிறகு பிரபுதேசாய் உடன் அர்ஜுன் டெண்டுல்கர் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்கவே முடியவில்லை. இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் படிப்படியாக உயர்ந்தது.