
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததுடன் அமெரிக்க அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இன்றைய போட்டிக்கான அமெரிக்க அணியில் காயம் காரணமாக அந்த அணி கேப்டன் மொனாங்க் படேல் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் அணியில் சேர்க்கப்பட்டு, ஆரோன் ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார். இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் அமெரிக்க அணி 3 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இணைந்த ஸ்டீவன் டெய்லர் - கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.