1-mdl.jpg)
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது கடந்த ஜனவரி 22தேதி தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.முன்னதாக அவர் முதல் டி20 போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் உலகின் 21ஆவது பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.