
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங், இஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மற்றும் ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதில் இந்திய அணியைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சிக்கந்தர் ரஸா 24 போட்டிகளில் 573 ரன்களையும், பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 15 போட்டிகளில் விளையாடி 539 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 24 போட்டிகளில் 738 ரன்களையும் சேர்த்து இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.