
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் துவக்கத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 27.3 ஓவரில் வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து 117 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக போட்டியிலேயே அசத்தலாக விளையாடி 9 பவுண்டரியுடன் 55* ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் எடுத்து 16.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றிக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து முக்கிய பங்காற்றிய அரஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.