
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 273 ரன் எடுக்க, ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா (34), போலந்து (13) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக உணவு இடைவேளை வரையிலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது, 67 ஓவரில் 174 ரன் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி.
பிராட் ‘வேகத்தில்’ போலந்து (20) ஆட்டமிழந்தார். பின், கவாஜா, ஹெட் இணைந்தனர். துவக்கத்தில் ஹெட் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம், கவாஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலியின் 45வது ஓவரில் ஹெட் இரண்டு பவுண்டரி விளாசினார். ஆனால், அதே ஓவரில் இவர் 16 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் செயல்பட்ட கவாஜா அரை சதம் அடித்தார்.