
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிர்மிங்ஹாமில் இன்று தொடக்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ஜாக் லீச் மற்றும் பென் டக்கட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடினர். ஆனால் துரதிஷ்டவசமாக டக்கட் 12 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஒல்லி போப், ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபாட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஒல்லி போப் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜாக் கிரௌலி 53 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். உணவு இடைவேளைக்கு மீதம் இரண்டு பந்துகள் இருக்க ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் அடிக்க முயற்சித்து கீப்பரிடம் பிடிபட்டு ஜாக் கிராலி வெளியேறினார். இவர் 73 பந்துகளுக்கு 61 ரன்கள் அடித்திருந்தார்.