பும்ராவுக்கு எதிராக நான் சிக்ஸர் அடித்ததில் மகிழ்ச்சி - அஷுதோஷ் சர்மா!
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவுக்கு எதிராக வந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ரோஹித் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் திலக் வர்மா 34 ரன்களையும், டிம் டேவிட் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரன், பிரப்ஷிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ரைலீ ரூஸோவ், ஹர்ப்ரீப் பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் அணியின் அஷுதோஷ் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி பந்துவீச்சாளர்களை கதிகலங்கவைத்தார். அதிலும் குறிப்பாக பும்ரா பவுலிங்கில் அஷுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்ஸ் அடித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்களையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் பும்ராவின் பந்துவீச்சில் எந்த வீரரும் இப்படி ஒரு சிக்ஸரை அடித்தது கிடையாது.
இதனால் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், பும்ரா உள்ளிட்டோரும் அஷுதோஷ் சர்மாவின் பேட்டிங்கை பாராட்டினர். இந்நிலையில் தனது அதிரடியான் ஆட்டம் குறித்து பேசிய அஷுதோஷ் சர்மா “நான் எப்போதும் வேகப்பந்துவீச்சாளர் பந்தில் ஸ்வீப் ஷாட் மூலமாக சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளேன். அந்த கனவு இன்று நனவானது. அதிலும் குறிப்பாக அது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவுக்கு எதிராக வந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி.
Sweeping Jasprit Bumrah For A Six! #JaspritBumrah #IPL2024 #PBKSvMI #AshutoshSharma pic.twitter.com/Ej1pcsop8y
— CRICKETNMORE (@cricketnmore) April 19, 2024
இதுபோன்ற ஷாட்களை தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருகிறேன். இதில் எந்த ஆச்சரியமும் தேவையில்லை. நான் களத்தில் இருந்த போது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அணியின் ஆலோசகர் சஞ்சய் பங்கர் என்னிடம், நீ நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார். தொடர்ந்து அப்படியான ஷாட்களை விளையாட வேண்டும் என்று கூறினார். என் மனதில் அது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now