
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மிகவும் பரபரப்பாக கடைசி பந்து வரை சென்று ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இந்தப் போட்டியில் கடைசி ஒரு பந்துக்கு ஒரு ரன் லக்னோ அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்த ஓவரை ஹர்சல் படேல் வீச, ஆவேஷ் கான் எதிர்கொண்டார். பந்துவீச்சாளர் முனையில் ரவி பிஷ்னோய் இருந்தார்.
பந்து வீச்சாளர் பந்தை வீசி முடிப்பதற்கு முன்பாகவே பந்துவீச்சு முனையில் நின்ற பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் சுதாரித்து பந்துவீச்சாளர் ஹர்ஷல் ரன் அவுட் செய்ய முயல, அந்த முயற்சி தோல்வியில் முடிந்து, மீண்டும் வீசப்பட்ட பந்தில் லக்னோ அணி, கீப்பர் தவறவிட்டதன் மூலம் ஒரு ரன் எடுத்து ஜெயித்தது.
இப்படியான ரன் அவுட் ஆரம்பத்தில் மன்கட்டிங் ரன் அவுட் என்று அழைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் இந்திய வீரர் வினு மன்கட் இப்படியான ரன் அவுட்டை செய்ததால் இந்த பெயர் நின்றது. மேலும் இப்படியான ரன் அவுட் ஆட்டத்தின் உத்வேகத்தை குறைப்பது என்கின்ற கருத்தும் இருந்தது.