
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் பேட்டிங் செய்வதற்கும் நன்றாக இருக்கும் என்பதால், அணியில் வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இருந்தால் சாதகமாக இருக்கும் என்ற புள்ளி விவரங்களும் உண்டு.
ஆஸ்திரேலியா அணியில் நிறைய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியில் சர்துல் தாக்கூர் தவிர, மற்றவர்கள் சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியாவை விளையாட வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்ற கருத்துக்கள் எழுந்தது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவரிடம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நீங்கள் இருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.