
நடப்பு ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் தங்களின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து, வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
இந்த காரணத்தினால் நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு முடிவு செய்யும். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும். அந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். மேலும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்திருக்கிறார்கள். இதன் காரணமாக யாரும் தொடர்ந்து விளையாட வேண்டிய நெருக்கடியில் இல்லை.